தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 13, 2021, 5:39 PM IST

Updated : Dec 13, 2021, 6:11 PM IST

ETV Bharat / state

உரத்தட்டுப்பாடு, விலை உயர்வு போக்க நடவடிக்கை தேவை - உழவருக்காக ராமதாஸ் குரல்!

பொட்டாஷ் விலை மூட்டை ரூ.1040-க்கு விற்பனை செய்யப்பட்டபோது ரூ.303 மானியமாக உர நிறுவனங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுவந்தது. வெளிச்சந்தையில் பொட்டாஷ் விலை உயர்த்தப்பட்ட பிறகும்கூட, பொட்டாஷ் உரத்திற்கான மானியம் உயர்த்தப்படாதது பொட்டாஷ் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு குரல் கொடுத்த ராமதாஸ்
விவசாயிகளுக்கு குரல் கொடுத்த ராமதாஸ்

சென்னை:உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கவலை அடைந்த விவசாயிகள். சம்பா, தாளடி நடவுப் பணிகளுக்குத் தேவையான உரத்தைத் தர வேண்டி உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் சம்பா, தாளடி பயிர்களுக்குத் தேவைப்படும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, பெரும்பாலான பகுதிகளில் பணம் கொடுத்தும் பொட்டாஷ் உரம் கிடைக்காததால் உழவர்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர். உழவரின் சிக்கலுக்குத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பொட்டாஷ் உரத்திற்கு தட்டுப்பாடு

தமிழ்நாடு முழுவதும் பொட்டாஷ் உரத்திற்குத் தட்டுப்பாடு

தமிழ்நாட்டின் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடிவடைந்து தாளடி நெற்பயிர் சாகுபடி தொடங்கியுள்ளது. அதற்கு முன்பாகவே சம்பா சாகுபடி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் சுமார் 13 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் இதே அளவில் சம்பா சாகுபடி நடைபெற்றுவருகிறது.

சம்பா, தாளடி நெற்பயிர்களின் விளைச்சல் அதிகரிக்க சாம்பல் சத்து உரமான பொட்டாஷ் மிகவும் அவசியமாகும். ஆனால், தமிழ்நாடு முழுவதும் பொட்டாஷ் உரத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சம்பா பருவத்திற்கு குறைந்தது 25 லட்சம் மூட்டை பொட்டாஷ் தேவைப்படுகிறது.

தட்டுப்பாட்டுக்கு காரணம்

ஆனால், அதில் பாதியளவுக்குக்கூட பொட்டாஷ் உரம் கிடைக்காததுதான் தட்டுப்பாட்டுக்கு காரணம் ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பொட்டாஷ் ஆயிரத்து 40 ரூபாய் என்ற விலையில் விற்பனைசெய்யப்பட்டது.

ஆனால், இப்போது ஒரு மூட்டை பொட்டாஷ் ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் ஆயிரத்து 800 ரூபாய் முதல் ஆயிரத்து 900 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தட்டுப்பாட்டுக்கு காரணம்

பொட்டாஷ் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் இந்தியாவில் இல்லை என்பதால் பெரும்பாலும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதிதான் செய்யப்படுகிறது. இறக்குமதியின் அளவு குறைந்ததும், சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் பொட்டாஷ் தேவை அதிகரித்ததும்தான் தட்டுப்பாட்டுக்கும் விலை உயர்வுக்கும் காரணம் ஆகும்.

இந்தியாவில் பொட்டாஷ் விலை குறைவாக கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் அனைத்து உரங்களுக்கும் மானியம் வழங்கப்பட்டுவருகிறது.

விலை உயர்வுக்கு முக்கியக் காரணம்

பொட்டாஷ் விலை மூட்டை ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டபோது 303 ரூபாய் மானியமாக உர நிறுவனங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுவந்தது. வெளிச்சந்தையில் பொட்டாஷ் விலை உயர்த்தப்பட்ட பிறகும்கூட, இந்தியாவில் பொட்டாஷ் உரத்திற்கான மானியம் உயர்த்தப்படாததும் பொட்டாஷ் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம்.

விலை உயர்வுக்கு முக்கியக் காரணம்

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் டிஏபி உரத்திற்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. டிஏபி உரம் தயாரிப்புக்கான மூலப்பொருள்களின் விலை உயர்ந்ததும், அதை ஈடு செய்யும் அளவுக்கு மத்திய அரசின் உர மானியம் உயர்த்தப்படாததுதான் தட்டுப்பாட்டுக்கும், விலை உயர்வுக்கும் காரணம் என்று கூறப்பட்டது.

பின்னர் டிஏபி உரத்திற்கான மானியத்தின் அளவை மூட்டைக்கு 500 ரூபாயிலிருந்து ஆயிரத்து 200 ரூபாயாக உயர்த்தியதால் டிஏபி உரத்தின் விலை குறைந்ததுடன், தட்டுப்பாடும் போக்கப்பட்டது.

விலை குறையும், தட்டுப்பாடும் தீரும்

அதேபோல், இப்போது பொட்டாஷ் உரத்திற்கான மானியத்தை 303 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயத்தினால் பொட்டாசின் விலை கணிசமாகக் குறையும். அதுமட்டுமின்றி தட்டுப்பாடும் தீரும். தமிழ்நாட்டில் பொட்டாஷ் உரத்திற்கு நிலவும் தட்டுப்பாடு, விலை உயர்வு குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று மானியத்தை உயர்த்தி, விலையைக் குறைக்கும்படி தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

உர மானியக் கொள்கைதான் காரணமாகும்

யூரியா தவிர்த்து மற்ற உரங்களின் விலைகள் கட்டுப்பாடு இல்லாமல் ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பதற்கு பத்தாண்டுகளுக்கு முன் மத்திய அரசு கொண்டுவந்த உர மானியக் கொள்கைதான் காரணமாகும்.

2010ஆம் ஆண்டுவரை அனைத்து உரங்களுக்கும் நிலையான விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. உரத் தயாரிப்புச் செலவுக்கும், விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை மானியமாக உர நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கிவந்தது.

2010ஆம் ஆண்டில் இந்த முறையில் அப்போதைய அரசு மாற்றத்தைக் கொண்டுவந்தது. யூரியா தவிர்த்த பிற உரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை மட்டுமே மானியமாக வழங்கும் முறையை மத்திய அரசு கொண்டுவந்ததால், மத்திய அரசுக்கு மானிய செலவு குறைந்தது. ஆனால், வெளிச்சந்தையில் உரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துவருகின்றன.

மத்திய அரசு முன்வர வேண்டும்

யூரியா உர மானியம் மட்டும் பழைய முறையில் தொடருவதால் அதன் விலை மட்டும் உயருவதில்லை. ஒரு மூட்டை யூரியா ரூ.272.16 என்ற நிலையான விலையில் விற்கப்படுகிறது. இதற்காக ஒரு மூட்டைக்கு சராசரியாக ரூ.900 வரை மானியம் வழங்கப்படுகிறது.

இதேபோல், அனைத்து உரங்களுக்கும் நிலையான விலையை நிர்ணயித்து, வேறுபாட்டுத் தொகையை உர நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கும் பழைய திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை மற்றவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை - ராமதாஸ்

தொழில்நுட்ப உதவியுடன் பயிர்களுக்கு இயற்கை உரமிடும் விவசாயிகள்!

Last Updated : Dec 13, 2021, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details