தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மூடப்பட்ட ஸ்டெர்லைட் அப்படியே இருக்கட்டும்' - ராமதாஸ் அறிக்கை..! - CPCB

Thoothukudi sterlite issue: ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணை விரைவில் உச்சநீதிமன்றத்தில் வரவுள்ள நிலையில், வலுவான ஆதாரங்களுடன் வாதங்களுக்கு தமிழக அரசு தயாராக வேண்டும் எனவும் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மூடியே இருக்கட்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

PMK Ramadoss on Thoothukudi Sterlite plant
PMK Ramadoss on Thoothukudi Sterlite plant

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 10:29 AM IST

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி, அந்த ஆலை நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணை விரைவில் நடைபெற உள்ள நிலையில், வலுவான ஆதாரங்களுடன் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று (ஜன.4) வெளியிட்ட அறிக்கையில், "ஸ்டெர்லைட் ஆலையில் அடிக்கடி ஏற்பட்ட விபத்துகள், ஆலையிலிருந்து அடிக்கடி வெளியேறும் நச்சு வாயுக்கசிவு ஆகியவற்றால் தூத்துக்குடி பகுதியில் வாழும் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சரிசெய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்தது. அக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி பகுதியில் உள்ள மக்கள் நடத்தி வந்த அறவழிப் போராட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி நூறாவது நாளை எட்டியது. அதனை முன்னிட்டு அம்மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மே 23ஆம் தேதி முதல் தற்காலிகமாகவும், மே 29ஆம் தேதி முதல் நிரந்தரமாகவும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பாக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதன் மீதான மேல்முறையீட்டு மனு தான் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

உலகம் முழுவதும் வணிகத் தொடர்புகளையும், அதிகார உறவுகளையும் கொண்ட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அதைப் பயன்படுத்தி, ஆலையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முயலும் என்பதால் இதற்கு முன் 2010ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.

ஆனால், அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தூத்துக்குடி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை ஏற்றுக் கொண்டாலும் கூட, அதற்காக 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு, சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அனுமதித்து தீர்ப்பு வழங்கியது.

ஸ்டெர்லைட் போன்ற நாசகார ஆலைகளின் இயக்கத்தை நாம் பார்க்கும் பார்வைக்கும், உச்சநீதிமன்றம் பார்க்கும் பார்வைக்குமிடையே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், அங்கு ஏற்பட்ட வாயு கசிவுகள், விபத்துகள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மக்களின் எதிர்ப்பு ஆகியவையே மக்களின் பார்வையாக இருக்கும்.

ஆனால் ஸ்டெர்லைட் ஆலையோ, உலகிலேயே தங்கள் ஆலையில் தான் மிகக்குறைந்த செலவில் தாமிரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்தத் தேவையில் 55% தாமிரம் ஸ்டெர்லைட் ஆலையில் தான் தயாரிக்கப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் இந்தியா தாமிரத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உருவாகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 ஆயிரம் பேர் வேலையிழந்து விட்டனர் போன்ற பொருளாதாரம் சார்ந்த புள்ளி விவரங்களையே உச்சநீதிமன்றத்தில் வாதமாக முன்வைக்கும்.

ஸ்டெர்லைட் ஆலையின் வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாதவாறு, அதனால் தமிழகத்திற்கு இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளையும், கடந்த காலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை ஸ்டெர்லைட் ஆலை மதிக்காததையும் தமிழக அரசு சுட்டிக்காட்ட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து 2018ஆம் ஆண்டு மூடப்பட்டது வரையிலான 22 ஆண்டுகளில் ஏற்பட்ட அழிவுகள் கொஞ்சநஞ்சமல்ல.

1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் கொல்லப்பட்டாலும், இருவர் மட்டுமே உயிரிழந்ததாக கணக்குக்காட்டப்பட்டது. 1997ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக்கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது.

தொடங்கப்பட்ட நாள் முதல் 2013ஆம் ஆண்டு வரை 82 முறை நச்சு வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு வரை கணக்கில் கொண்டால் இந்த எண்ணிக்கை நூறைத் தாண்டும். 1994 முதல் 2004 வரை இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர், 13 பேர் இறந்துள்ளனர். மேலும், பல உயிரிழப்புகள் வெளி உலகிற்கு தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு விட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

கடந்த 2010ஆம் ஆண்டில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை 2013ஆம் ஆண்டில் திறக்க அனுமதி வழங்கியதை அடுத்து, 5 ஆண்டுகள் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, உச்சநீதிமன்றம் விதித்த பெரும்பான்மையான நிபந்தனைகளை கடைபிடிக்கவே இல்லை. இந்த உண்மைகள் அனைத்தையும் அது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முன்வைக்க வேண்டும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 22ஆம் தேதியோ அல்லது அதற்கு அடுத்த சில நாட்களிலோ விசாரணைக்கு வரக்கூடும். அதை எதிர்கொள்ள தமிழக அரசு இப்போதே தயாராக வேண்டும். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்த மூத்த வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்களுடன் வழக்கறிஞர்கள் குழுவினர் கலந்துரையாடி தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவே இருக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது. இதை உச்சநீதிமன்றத்தில் அரசு உறுதி செய்ய வேண்டும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சட்டவிரோத மணல் விற்பனை வழக்கு; தனியார் பங்குதாரர்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details