சென்னை: இதுகுறித்து பாமக நிறுவனர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் புதிது புதிதாக கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட்டு வரும் போதிலும், குழந்தைகளை கொடுமைப்படுத்தாத கல்வி முறை, இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
பள்ளிக்குச் செல்வதை தண்டனையாக கருதாத சூழலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தருவது தான் இன்றைய முதன்மைத் தேவையாகும். அதை நோக்கிய நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.திண்டிவனமாக இருந்தாலும், சென்னையாக இருந்தாலும், நான் பயணிக்கும் வேறு கிராமங்களாக இருந்தாலும் என்னை வருந்த வைக்கும் விஷயம் பள்ளிக் குழந்தைகள் தங்களின் புத்தகப் பைகளை சுமக்க முடியாமல், சுமை தூக்கும் தொழிலாளர்களைப் போல சுமந்து செல்வது தான்.
அவ்வாறு அதிக எடை கொண்ட புத்தகப் பைகளை சுமந்து செல்லும் அனைத்துக் குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் தான். அரசு பள்ளிகளில் புத்தகச் சுமை அவ்வளவாக இல்லை. ஆனால், தனியார் பள்ளிகளின் மாணவச் செல்வங்கள் 10 கிலோவுக்கும் கூடுதலான எடை கொண்ட புத்தகப் பைகளைத் தான் சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
அதிக எடை கொண்ட புத்தகப் பைகளை விட கொடுமை, அவற்றை சுமந்து கொண்டு 3 மாடிகள் அல்லது 4 மாடிகள் ஏற வேண்டியிருப்பது ஆகும். மலர்களைப் போல கையாளப்பட வேண்டிய மழலைகள், இவ்வளவு அதிக எடை கொண்ட புத்தகப் பைகளை சுமந்து செல்ல வேண்டியிருப்பதால், பள்ளிக்கு சென்று வந்த பின்னர் முதுகு வலி, உடல் வலி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அவர்களால் பள்ளிகளில் நடத்தப்பட்ட பாடங்களை படிப்பதோ, வீட்டுப்பாடம் செய்வதோ சாத்தியமாவதில்லை.
பள்ளிக்குழந்தைகள் பலரை நானே அழைத்து விசாரித்த போது, அவர்கள் இதை தண்டனையாக கருதுகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. அதிக பாடப்புத்தகங்களை படிக்கச் சொல்லும் பள்ளிகள் தான் சிறந்த பள்ளிகள் என்ற மாயைக்கு தமிழ்ச் சமுதாயம் அடிமையானது தான் மழலைகள் அனுபவிக்கும் அனைத்து கொடுமைகளுக்கும் காரணம் ஆகும். இந்த மாயை தகர்த்தெரியப்பட வேண்டும்.