இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்," மத்திய அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். கரோனா பாதிப்பால் இந்தியப் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் கடந்த இரு ஆண்டுகளில் பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில், அவற்றை மேம்படுத்த மத்திய அரசு எத்தகைய திட்டங்களை அறிவிக்கப் போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் அதிக அளவில் இருந்தது. அத்தகைய எதிர்பார்ப்புகளில் கணிசமானவற்றை மத்திய நிதி நிலை அறிக்கை நிறைவேற்றியிருக்கிறது. அந்த வகையில் இந்த நிதிநிலை அறிக்கை வரவேற்கத்தக்கது.
மூலதன செலவு
இந்தியாவின் உடனடித் தேவை பொருளாதார வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பு மேம்பாடும், வேலைவாய்ப்பு பெருக்கமும் தான். அவற்றை நிறைவேற்றும் வகையில் வரும் ஆண்டில் ரூ. 7.50 லட்சம் கோடி மூலதன செலவுகளுக்காக செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 35.40% அதிகமாகும். கட்டமைப்புக்கான அரசின் முதலீடு இந்த அளவுக்கு அதிகரிக்கப்பட்டிருப்பது பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நடப்பாண்டில் 25,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும், 2000 கி.மீ இருப்புப்பாதைகள் மேம்படுத்தப்படும், வேளாண் பொருட்களை தொடர்வண்டி மூலம் கொண்டு செல்ல கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் பயனளிப்பவை.
5ஜி சேவை அறிமுகம்
2025-ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி வழங்கப்படும், 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியவை. 80 லட்சம் ஏழைகளுக்கு வீட்டு வசதி வழங்க ரூ.48,000 கோடி நிதி ஒதுக்கீடு, 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் செயல்வடிவம் பெறும் போது கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து நாடும், மக்களும் மீண்டு வர முடியும். கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு 200 கல்வித் தொலைக்காட்சிகள் தொடங்கப் படும்; அனைத்து மாநில மொழிகளிலும் கல்வி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதும் வரவேற்கத்தக்கது.
வேளாண் வளர்ச்சி
வேளாண்மையை பொறுத்தவரை நெல் மற்றும் கோதுமை கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக ரூ.2.37 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதன் மூலம் இதுதொடர்பாக உழவர்களிடம் நிலவி வந்த ஐயங்கள் போக்கப்பட்டுள்ளன. இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும், வேளாண்மையில் ஆளில்லா விமான தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும், 2022-23 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கடைபிடிக்கப்படும், சமையல் எண்ணெய் தேவையில் தற்சார்பு அடையும் நோக்குடன் எண்ணெய் வித்து உற்பத்தி அதிகரிக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வேளாண் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.