சென்னை: பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக அமர்த்தப்பட்ட 2,400 செவிலியர்கள் இன்று முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து பணியாற்றி வந்த செவிலியர்களை பணிநீக்கியிருப்பது நியாயமல்ல.
இந்தியாவில் 2020ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்று மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கிய போது, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காக 3200 செவியர்கள் நியமிக்கப் பட்டனர். அவர்களில் 800 பேர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், மீதமுள்ள 2400 செவிலியர்களையும் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அவற்றை கனிவுடன் பரிசீலிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, அவர்களின் கோரிக்கைகளை புறக்கணித்து விட்டு, 2400 செவிலியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது.
சாதாரண காலங்களில் பணியாற்றுவதற்கும், கரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. கரோனா காலத்தில் பணியாற்ற பலரும் முன்வராத காலத்தில், 3,200 செவிலியர்களையும் கட்டாயப்படுத்தி தான் தமிழக அரசு பணியில் சேர்த்தது. அவர்களும் கரோனா காலத்தின் அச்சங்களையும், நெருக்கடிகளையும் தாங்கிக் கொண்டு பணியாற்றினார்கள். கரோனா இரண்டாவது அலை ஏற்பட்ட போதும், மூன்றாவது அலை ஏற்பட்ட போதும் செவிலியர்களின் பணி தேவைப்பட்டதால் அவர்களின் ஒப்பந்தக்காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இப்போது நான்காவது அலை ஏற்படும் என்று அஞ்சப்படும் சூழலில் அவர்களை பணியில் தொடர அரசு அனுமதிக்க வேண்டும்.