சென்னை: இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "காவிரியில் போதிய அளவு தண்ணீர் வராததால், காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு கண்களுக்கு எட்டிய வரை எந்த வாய்ப்புகளும் தென்படாததால், அரும்பாடுபட்டு வளர்த்த குறுவை நெற்பயிர்களை காப்பாற்ற முடியாதோ என்ற கவலையிலும், வேதனையிலும் காவிரிப் படுகை உழவர்கள் ஆழ்ந்துள்ளனர்.
காவிரி பாசன மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அறுவடை நடைபெற்றுள்ளது. மீதம் உள்ள 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு வழியே இல்லை. குறுவைப் பயிர்கள் காப்பாற்றப்படாவிட்டால், உழவர்களுக்கு பேரிழப்பு ஏற்படக் கூடும்.
கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஓரளவு வெற்றியாக நடைபெற்று வருகிறது. அதற்கு முன் காவிரியில் தண்ணீர் கிடைக்காததால், தொடர்ந்து 8 ஆண்டுகள் உழவர்கள் பேரிழப்பை எதிர்கொண்டனர். காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்களுக்கு அதே நிலை மீண்டும் ஏற்படக்கூடாது. உழவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படாமல் அரசுதான் தடுக்க வேண்டும்.