சென்னை: நகராட்சி நிர்வாகத்துறையில் காலியாக உள்ள பணி இடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்புவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத்துறையில் உள்ள 2,534 தொடக்க நிலைப் பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அல்லாமல் நகராட்சி நிர்வாகத்துறை மூலமாக நேரடியாக தேந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
எந்த நோக்கத்திற்காக உள்ளாட்சிகள், பொதுத்துறை அமைப்புகளின் பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டதோ அதற்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு முறைகேடுகள் நடப்பதற்கே வழிவகுக்கும்.
நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 20 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகளில் 2,534 தொடக்க நிலைப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை அனைத்தும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும்.
ஆனால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல் நகராட்சி நிர்வாகமே சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்க முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த வேண்டிய போட்டித் தேர்வை நகராட்சி நிர்வாகத் துறையே நடத்துவதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை.