சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிகார் அரசைத் தொடர்ந்து ஒடிசா மாநில அரசும், கர்நாடக அரசும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட முடிவு செய்திருக்கின்றன. ஒடிசாவில், மே 1-ஆம் தேதி முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் அம்மாநில அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதை விரைவில் வெளியிட இருப்பதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
அதேபோல், 2018-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அடிப்படையிலான புதிய அறிக்கையை கர்நாடக அரசிடம் நீதியரசர் ஜெயப்பிரகாஷ் ஹெக்டே தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அடுத்த மாதத்திற்குள்ளாக தாக்கல் செய்யும். அதன்பின் அதன் விவரங்களும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமூகநீதியைக் காப்பதற்கான ஒடிசா மற்றும் கர்நாடக அரசின் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.
சமூகநீதியின் தொட்டில் தமிழ்நாடு தான் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். சமூகநீதி வழங்குவதற்கான பல முன்முயற்சிகள் தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கியுள்ளன. அதேபோல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துதல் என்ற சமூகநீதித் தென்றலும் தென் எல்லையான தமிழகத்திலிருந்து தான் தொடங்கியிருக்க வேண்டும்.