சென்னை:முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி பணி முறையை கட்டாயமாக்க வேண்டும். அதற்கு வசதியாக அனைத்து நிலை அரசு மருத்துவமனைகளிலும் போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மூலம் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் பயின்று வந்த தமிழழகன் என்ற மருத்துவர், மருத்துவர்களுக்கான பணி அறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர் தமிழழகனின் மறைவுக்கு கூறப்படும் காரணங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.
மருத்துவர் தமிழழகன் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். ஓய்வின்றி இரவு பகலாக பணி செய்ததால் சனிக்கிழமை மாலை அவருக்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஓய்வு எடுப்பதற்காக முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான பணி அறைக்கு சென்று அமர்ந்த தமிழழகன் அடுத்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார்.
மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது. 26 வயதே ஆன மருத்துவர் தமிழழகனுக்கு இயல்பாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், ஓய்வின்றி தொடர்ச்சியாக பணி செய்ததால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அவருடன் பணியாற்றும் சக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பணிச்சுமையால் மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த திசம்பர் மாதத்தில் பணிச்சுமையால் உயிரிழந்த மூன்றாவது மருத்துவர் தமிழழகன் ஆவார். அதற்கு முன் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவம் பயின்று வந்த மருத்துவ மாணவர் மருதுபாண்டியன் 48 மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்ததால் உயிரிழந்தார்.