சென்னை:1937ஆம் ஆண்டு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தங்களை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பதை கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருமண அரங்கங்கள், விளையாட்டு அரங்கங்கள், விருந்துக் கூடங்கள் போன்ற இடங்களில் மது அருந்துவதற்கு அனுமதி அளிக்கும் முடிவை, தமிழக அரசு கடந்த மார்ச் 18ஆம் தேதி அரசிதழில் வெளியிட்ட போதே, அதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது.
அதைத் தொடர்ந்து திருமண அரங்குகளில் மது அருந்த அனுமதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. ஆனாலும், விளையாட்டு அரங்குகள், பன்னாட்டு நிகழ்வுகளிலும் மது வினியோகம் செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்களைக் காப்பதில் கவனம் செலுத்தாமல், மது வணிகம் செய்வதில் கவனம் செலுத்துவதை ஏற்க முடியாது.
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தமிழ்நாட்டு மக்களின் விருப்பமும் அது தான். மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதாகவும், கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்பதால் தான் வேறு வழியின்றி மது வணிகம் செய்வதாகவும் தமிழக அரசு கூறி வருகிறது" என்று சாடி இருந்தார்.