தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

#800 துரோக வரலாற்றுக்குத் துணைபோக வேண்டாம் - ராமதாஸ் அறிவுரை - 800 திரைப்படம்

சென்னை: 800 திரைப்படத்தில் நடித்து துரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணை போகக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

PMK founder ramadoss adviced actor vijay sethupathi about 800 film
PMK founder ramadoss adviced actor vijay sethupathi about 800 film

By

Published : Oct 15, 2020, 1:24 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் 800 என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கின்றன.

அறியாமையால் ஒரு துரோக வரலாற்றுக்கு துணை போக விஜய் சேதுபதி முனைவது தவறு. அது திருத்தப்பட வேண்டும்.

ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே குடும்பத்தினை புகழ்ந்து பேசுவது தான் அவரின் முழு நேரத் தொழில். இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் ஆளுநராக முத்தையா முரளிதரனை நியமிக்கலாமா? என்று இராஜபக்சே சகோதரர்கள் பரிசீலிக்கும் அளவுக்கு அவர்களின் விசுவாசியாக இருந்தவர் முரளிதரன்.

ஈழத்தமிழர்களுக்கு முரளிதரன் செய்த துரோகங்களுக்கு இந்த உதாரணங்களே போதுமானவை. முரளிதரன் இனப்படுகொலை செய்தவர்களுக்கும், போர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு துணை நிற்பவர். இந்த உண்மைகள் விஜய் சேதுபதிக்கு தெரியாமல் இருக்கலாம்; அதனால் அவர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.

முத்தையா முரளிதரனின் விளையாட்டுச் சாதனையை சித்தரிக்கும் படத்தில் மட்டும் தான் நடிக்கிறேன் என்று விஜய் சேதுபதி தரப்பில் விளக்கம் அளிக்கப்படலாம். உண்மையில் 800 திரைப்படம் முரளியின் சாதனைகளைப் பற்றி மட்டும் பேசும் படமாக இருக்காது. அவர் மூலமாக இராஜபக்சே சகோதரர்களை உத்தமர்களாக சித்தரிக்கும் காட்சிகள் படம் முழுவதும் நிறைந்திருக்கும் என்பது தான் எங்களின் ஐயம்.

விஜய் சேதுபதியின் படைப்புச் சுதந்திரத்தை மதிக்கிறேன். முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தால் அவரை மட்டைப்பந்து வீரராக எவரும் பார்க்க மாட்டார்கள். மாறாக துரோகத்தின் சின்னமாகவே பார்ப்பார்கள்.

800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்றெல்லாம் நான் வலியுறுத்தப்போவதில்லை. அந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தால் இனமான வரலாற்றில் இடம் பெறுவார். மாறாக, தமிழர்களின் எதிர்ப்பை மீறி இந்தப்படத்தில் நடித்தால் இழிதுரோக வரலாற்றில் இடம் பெறுவார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details