தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களுக்கு, தொழில் மற்றும் தொழில்நுட்ப பேராசிரியர்களை துணைவேந்தர்களாக நியமிக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் வளர்ச்சியை பாதிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தவிர்க்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழ்நாட்டில் தொழில் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்பு பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும் வரை அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட கல்வியாளர்கள் தான் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர்.
கல்வியில் தொலைநோக்கு பார்வை
ஏ.எல்.முதலியார், நெ.து.சுந்தரவடிவேலு, மால்கம் ஆதிசேஷய்யா போன்றவர்கள் பல்வேறு கல்வி பின்புலங்களில் இருந்து வந்தாலும் கல்வி வளர்ச்சி சார்ந்த தொலைநோக்குப் பார்வை இருந்ததால்தான் தாங்கள் வகித்த துணைவேந்தர் பதவிகளுக்கு பெருமை சேர்த்தனர். இன்றும் கொண்டாடப்படுகின்றனர்.
பின்னாளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம், வேளாண் கல்விக்கு வேளாண்மை பல்கலைக்கழகம், சட்டப் படிப்புக்கு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மருத்துவப் படிப்புக்கு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், மீன்வளக் கல்விக்கு ஜெயலலிதா பெயரில் தனி பல்கலைக்கழகம் உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளன.
துணைவேந்தர் நியமனம் மறுபரிசீலனை
இசை, விளையாட்டு, ஆசிரியர் கல்வி, கால்நடை அறிவியல் ஆகியவற்றுக்கும் தனித்தனியாக சிறப்பு பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் அது சார்ந்த துறையில் வல்லமை பெற்ற, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள்தான் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை மாறி வருகிறது. தொழில் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்கலைக்கழகங்களுக்கு அவை சார்ந்த பேராசிரியர்கள் மட்டுமே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், கலை மற்றும் அறிவியல் சார்ந்த பல்கலைக்கழகங்களுக்கும் அத்துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களை நியமிக்காமல், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட சிறப்பு படிப்புகளைப் பயின்ற பேராசிரியர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர். இது மிகவும் தவறான அணுகுமுறை.
துறை சார்ந்த துணைவேந்தர் ஏன் தேவை?