இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. 78 சதவீதம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 100-க்கும் குறைவானோர் தான் படிக்கின்றனர் என்பதிலிருந்தே அரசு பள்ளிகள் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டன என்பதை உணர முடியும்.
அரசு பள்ளி மேம்பாட்டுக்கு செய்ய வேண்டியது என்ன? - தமிழக அரசுக்கு ராமதாஸ் அட்வைஸ்!
தமிழ்நாட்டில் உள்ள 78 சதவீதம் அரசுப் பள்ளிகளில் 100க்கும் குறைவான மாணவர்கள் படிப்பதாகவும், அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை ஏற்படுத்த சிறப்புத் திட்டங்கள் வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் இடம் பெற்றுள்ளது. எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை 36.05 சதவீதம் , அதாவது 11,251 பள்ளிகளில் 30-க்கும் குறைவான மாணவர்கள் மட்டும் தான் பயில்கின்றனர். பல பள்ளிகளில் பத்துக்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் மாணவர்கள் உள்ளனர்.
13,027 பள்ளிகளில் 31 முதல் 100 வரையிலான மாணவர்கள் 41.74 சதவீதமும், 6,111 பள்ளிகளில் 101 முதல் 250 வரையிலான மாணவர்கள் 19.58 சதவீதம் மட்டும் தான் பயில்கின்றனர். 250-க்கும் கூடுதலான மாணவர்கள் பயிலும் பள்ளிகளின் எண்ணிக்கை 813 2.60 சதவீதம் மட்டுமே. 6 பள்ளிகளில் மட்டும் தான் 1000 க்கும் கூடுதலான மாணவர்கள் பயில்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை குறித்த இந்த விவரங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியளிக்கக் கூடியவை அல்ல.
இரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை 90 சதவீதம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1000-க்கும் கூடுதலான மாணவர்கள் இருப்பார்கள். பல அரசு பள்ளிகளில் இடம் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கும். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது இரு பிரிவுகள் இருக்கும்; நகர்ப்புற பள்ளிகளில் மூன்று பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தது 50 மாணவர்களாவது இருப்பர். ஆனால், இன்று ஒட்டுமொத்த பள்ளியிலுமே 50 மாணவர்கள் படிப்பது அதிசயமாகியிருக்கிறது.
கட்டமைப்பு, ஆசிரியர்கள் கிடையாது:தனியார் பள்ளிகள் மீதான மோகம் தான் இதற்கு காரணம் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற அரசு பள்ளிகளில் இடம் கிடைப்பதே அரிதாக உள்ளது. அதற்குக் காரணம் அந்தப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டிருப்பதும், தரமான கல்வி வழங்கப்படுவதும் தான். பெரும்பான்மையான அரசு பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததும் தான் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்ததற்கு காரணம் ஆகும். இந்தக் குறை போக்கப்பட வேண்டும்.
சேதமடைந்தப் பள்ளிக்கு கட்டிடம் கட்டாத அவலம்:தமிழக அரசுத் துறைகளில் பள்ளிக்கல்வித் துறைக்கு தான், பிற துறைகளை விட மிகவும் அதிகமாக ரூ.36,895.89 கோடி நடப்பாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஒதுக்கீடு முழுவதும் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை பணியாளர்களுக்கான ஊதியம், தொடர் செலவினம் ஆகியவற்றுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். இந்த நிதியைக் கொண்டு கட்டமைப்பு வசதிகளை போதிய அளவில் மேம்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் சேதமடைந்த நிலையில் உள்ளதாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கணக்கெடுக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அந்த பள்ளிக் கட்டிடங்களை இடித்து விட்டு, புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டித்தரப்படவில்லை.
ஒராசிரியர் பள்ளிகள்:தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளைக் கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மற்றப் பள்ளிகளிலும் நிலைமை திருப்தியளிக்கும் வகையில் இல்லை. ஓராசிரியர் பள்ளிகள் தவிர, மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு 2 முதல் 3 ஆசிரியர்களை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி தரமான கல்வியை வழங்க முடியும்? இத்தகைய பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் எவ்வாறு முன் வருவர்?
அரசுப் பள்ளிகளை வலுவாக்க வேண்டும்:அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டுமானால் அது அரசு பள்ளிகளை வலுப்படுத்துவதன் மூலம் தான் சாத்தியமாகும். இதை உணர்ந்து அனைத்து அரசு பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தல், நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு தரமான பயிற்சி அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான சிறப்புத் திட்டத்தை வகுத்து, அதற்குத் தேவையான நிதியையும் ஒதுக்குவதன் மூலம் அரசு பள்ளிகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதன் பயனாக அரசு பள்ளிகளை நோக்கி அனைத்துத் தரப்பு மாணவர்களும் படையெடுக்கும் நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்க வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'முத்துவும் 30 திருடர்களும்' காவல்துறை வெளியிட்ட முக்கிய புத்தகம்!