சென்னை: பாமக நிறுவனரும், மருத்துவருமான ராமதாஸ் தமிழ்நாடு பட்ஜெட் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் " தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்புகள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.
ஊரக வேலை உறுதித்திட்டத்தின் அடிப்படையில் வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை நூறிலிருந்து 150 ஆக உயர்த்தப்படும், மகளிருக்கான பேறுகால விடுமுறை ஓராண்டாக அதிகரிக்கப்படும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2756 கோடி கடன் தள்ளுபடி என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளன.
ராமதாஸ் வரவேற்பு
பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோரிக்கையை செயல்படுத்தும் வகையில், காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காக முதலமைச்சர் தலைமையில் ரூ.500 கோடியில் புதிய இயக்கம் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள காடுகள் மற்றும் மரங்களின் அடர்த்தியை 33% ஆக உயர்த்தும் நோக்குடன் மிகப்பெரிய அளவில் மரம் வளர்க்கும் திட்டம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் மொழி, இலக்கியங்கள், தொல்லியல் ஆய்வுகள் ஆகியவற்றுக்காகவும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டீசல் விலையும் குறைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா, திருவள்ளூரில் மின்வாகனங்கள் பூங்கா, திண்டிவனம், மணப்பாறை, தேனி ஆகிய இடங்களில் உணவுப்பூங்காக்கள் அமைக்கப்படும் என்பதும் வரவேற்கத்தக்கது. ஒன்பது மாவட்டங்களில் சிப்காட் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ள அரசு, அந்தத் திட்டங்களுக்கு விரைந்து செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டிருக்கிறது. கரோனா காலத்தில் மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ள நிலையில், அடித்தட்டு மக்களின் நலன் கருதி வாக்குறுதி அளித்தவாறு பெட்ரோல் விலையை மேலும் ரூ. 2 குறைக்க வேண்டும், விவசாயிகள் பயன்படுத்தும் டீசல் விலையையும் அரசு குறைக்க வேண்டும்.