தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"2030ஆம் ஆண்டுக்குள் புவிவெப்பமயமாதலை தடுக்காவிடில் 3.5 கோடி மக்கள் வேலையிழப்பர்" - ராமதாஸ் காட்டம்! - ராமதாஸ்

சென்னை: புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

புவிவெப்பமயமாதல்-ராமதாஸ்

By

Published : Sep 1, 2019, 11:26 PM IST

மனித குலத்தின் உற்ற தோழனாக திகழும் கடல்கள் மிகப்பெரிய எதிரிகளாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. புவி வெப்பமயமாதல் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இப்புதிய எச்சரிக்கை உலகம் விழித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" புவிவெப்பமயமாதலின் தீயவிளைவுகளை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டம் பற்றி விவாதிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக கடல்கள் & பனிப்படலம் மீதான புவி வெப்பமயமாதலின் தாக்கம் குறித்த காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசுக் குழுவின் சிறப்பு அறிக்கையை ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ளது.

புவி வெப்பமயமாதலால் உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை, புவியின் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்தத் தவறினால் உலகையும், மனித குலத்தையும் காப்பாற்ற முடியாது என்றும் எச்சரித்திருக்கிறது. மனிதகுலத்தின் தொழிற்துறைச் சார்ந்த செயல்பாடுகளால் வெளியாகும் கரியமில வாயுவின் அளவை மிகப்பெரிய அளவில் குறைக்காவிட்டால், வட துருவத்தில் உள்ள பனிப்பாறைகளில் குறைந்தது 30% நடப்பு நூற்றாண்டுக்குள் உருகி விடும் என்று பன்னாட்டுக்குழு கூறியுள்ளது. அவ்வாறு பனிப்பாறைகள் உருகும் போது, அவற்றில் அடைபட்டுக் கிடக்கும் பல்லாயிரம் கோடி டன்கள் கரிமம் வெளியாகி வளிமண்டலத்தில் சேரும்; அதனால் புவிவெப்பமயமாதல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கைமீறி சென்று விடும் ஆபத்து காத்திருக்கிறது.

புவிவெப்பமயமாதல் கட்டுப்படுத்தப்படாவிட்டால் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 3.50 கோடி வேலையிழப்பு ஏற்படும். உலகிலேயே புவிவெப்பமயமாதலால் அதிக வேலையிழப்பை சந்திக்கும் நாடாக இந்தியா தான் இருக்கும். விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், அதிகரிக்கும் வெப்பநிலையால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாவார்கள். அதனால், புவி வெப்பமயமாதலின் தீமைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு அதிகமாக இருக்கிறது.

புவி வெப்பமயமாதலை தடுக்கக்கூடிய நிலையில் உலகம் இல்லை; மாறாக கட்டுப்படுத்த வேண்டிய சூழலில் தான் பூமி உள்ளது. எனவே, புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் இந்தியா மேற்கொள்ள வேண்டும். அதற்காக காலநிலை அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும். உலகம் முழுவதும் நாடுகள், உள்ளாட்சி அமைப்புகள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இத்தகைய பிரகடனத்தை வெளியிட்டு, காலநிலை மாற்றத்தின் தீமைகளை தடுக்கும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன."

அதேபோல், நாடாளுமன்றத்தில் மத்திய அரசும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக அரசும் காலநிலை மாற்ற அவசர நிலை பிரகடனத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details