சென்னை:தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்குவதற்கான சட்டத்தை வரும் 9ஆம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது "X" வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வட இந்தியத் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தில் அதிக வேலை செய்வதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், உள்ளூர் மக்கள் அதிக ஊதியமும், அதிக விடுமுறையும் கேட்பதுடன் குறைந்த அளவில் மட்டுமே வேலை செய்வதால் அவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கூறியிருக்கிறார்.
ஒரு மாவட்ட ஆட்சியராக மாவட்ட மக்களின் நலனுக்கும், வாழ்வாதாரத்திற்கும் வகை செய்ய வேண்டியவர், தனியார் மனிதவள மேலாண்மை நிறுவனத்தின் அதிகாரியைப் போன்று பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகளைக் கொண்ட மாவட்டங்களில் காஞ்சிபுரமும் ஒன்றாகும். சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. அந்தத் தொழிற்சாலைகளில், உள்ளூர் மக்களுக்கு தான் வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கூட தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 80 விழுக்காடு வரை உள்ளூர் மக்களுக்குத் தான் வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளன. தமிழ்நாட்டில் அத்தகைய சட்டம் இயற்றப்படவில்லை என்றாலும் கூட, குறைந்தபட்சம் முன்னுரிமையாவது அளிக்கப்பட வேண்டும். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் மக்களை புறக்கணித்து விட்டு, வட இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிப்பதும், அதை மாவட்ட ஆட்சியரே நியாயப்படுத்துவதும், எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.