சென்னை: பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, நடப்பாண்டிலும் குறுவை நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை. காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்படாததால், மூன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் வாடுகின்றன. தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு வரை குறுவை நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டு வந்தது.
குறுவை பயிர்களுக்கு காப்பீடு:இப்போதும் தமிழகத்தில் நெல் தவிர்த்து மக்காச்சோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மஞ்சள், சிவப்பு மிளகாய், தக்காளி, வெண்டை, கத்திரி, முட்டைகோஸ், கேரட், பூண்டு, இஞ்சி போன்ற பிற குறுவை பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. குறுவை நெற்பயிர்களுக்கும் காப்பீடு வழங்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
தமிழக அரசு காப்பீட்டை மறுக்கிறது: ஆனால், தமிழக அரசு தான் பயிர் காப்பீடு வழங்க மறுத்து வருகிறது. இது நியாயமல்ல. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு உள்ள நெருக்கடியை புரிந்துகொள்ள முடிகிறது. மத்திய அரசு இத்திட்டத்திற்கான பங்களிப்பை 49 விழுக்காட்டில் இருந்து 25-30% என்ற அளவுக்கு குறைத்து விட்டது.
கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டின் அளவு அதிகரித்து விட்டதால் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் நெருக்கடி அளிக்கின்றன. தமிழக அரசு இவற்றைக் கருத்தில் கொண்டே நெற்பயிருக்கான காப்பீட்டை மறுக்கிறது. ஆனால், அதன் பாதிப்பை விவசாயிகள் தான் அனுபவித்து வருகின்றனர்.
2 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்படும்: பயிர் காப்பீடு செய்யப்படவில்லை என்றாலும் கூட, குறுவைப் பருவ நெற்பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் நெல் விவசாயிக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் இழப்பீட்டுடன் ஒப்பிடும் போது, பேரிடர் நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு மிக மிக குறைவாகும்.