பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு சென்னை: பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பட்டப் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தங்க பதக்கங்களையும், 4,305 மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்கினார்.
பின்னர் பேசிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பட்டபடிப்பு முடித்துச் செல்லும் மாணவர்கள் இந்தியா கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய வின்வெளி வீரர்கள் அமெரிக்காவில் பூஸ்டன் டெக்சாசில் பயிற்சி பெற்று சர்வதேச வின்வெளி நிலையத்திற்கு செல்வதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் கையெழுத்திட்டுள்ளார்.
2025இல் மனிதன் நிலவுக்கு செல்வதற்கான முயற்சியாக இந்தியா - அமெரிக்கா இணைந்து மேற்கொண்டுள்ள கூட்டு முயற்சியான ஆர்டிமிஸ் திட்டத்தின் மூலம் வின்வெளித் துறை சார்ந்து பல்வேறு வாய்ப்புகள் உள்ளது. F414 ரக சிறிய விமான இன்ஜின்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் போடபட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் உண்டாகும்” என்றார்.
முன்னதாக, “கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு ஐஐடி. வாரம் ஒரு புதிய பல்கலைக்கழகம், மூன்று நாட்களுக்கு ஒரு அடல் டிங்கரிங் அறிவியல் ஆய்வுக் கூடம், இரண்டு நாட்களுக்கு ஒரு புதிய கல்லூரி மற்றும் தினம் ஒரு ஐடிஐ ஆகியவை நம் தேசத்தில் புதிதாய் அமைக்கப்படுகிறது.
1,133 பல்கலைக்கழகங்கள் நமது நாட்டில் உள்ளது. 2014க்குப் பிறகு 53 சதவீதம் பல்கலைக்கழகங்கள் உயர்ந்துள்ளது. 2014க்கு முன்பு 720 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் 97 சதவீதம் எம்பிபிஎஸ் சீட்டுகள் உயர்ந்துள்ளன. 51,348 எம்பிபிஎஸ் சீட்டுகள் 2014 வரை இருந்தது. 99,763 மருத்துவ சீட்டுகள் இன்று உயர்ந்துள்ளது. ஏறத்தாழ ஒரு லட்சம் சீட்டுகள் மருத்துவப் படிப்பில் தயாராக உள்ளது.
81 சதவீதம் மருத்துவக் கல்லூரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2014 வரை 387 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தது. தற்போது இன்று வரை 700 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. படித்துவிட்டு வெளியே வரும் மாணவர்களுக்கு திறமை இருக்கிறதா என கேட்கிறார்கள்.
மத்திய அரசு சார்பில் 2 கோடியே 83 லட்சம் மாணவர்களுக்கு ‘திறமை இந்தியா’ திட்டத்தின் கீழ் ஏராளமான மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர். அக்டோபர் 2022இல் இருந்து இன்று வரை 4 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு ஏற்படுத்தப்பட உள்ளது.
அதேபோல் வர்த்தக முத்திரைகள், பொறியியல் வடிவங்கள், புதிய கண்டுபிடிப்புகள் போன்றவைகளுக்கான உரிமம் மற்றும் அங்கீகாரம் வழங்கும் முறை சுலபமாக்கபட்டதால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அவை அதிகமாக்கபட்டு தற்போது ஆண்டுக்கு 30,000 புதிய கண்டுபிடிப்புகளுக்கு வடிவ உரிமம் வழங்கப்படுகிறது. 2 லட்சத்து 50 ஆயிரம் வர்த்தக முத்திரைகள் வழங்கபடுகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: Maharashtra: மகாராஷ்டிராவில் திடீரென தீ பிடித்த பேருந்து - 25 பேர் உடல் கருகி உயிரிழப்பு!