தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“நான் தமிழை நேசிக்கிறேன்”.. ராமகிருஷ்ண மடத்தின் 125 ஆவது ஆண்டு விழாவில் பிரதமர் பேச்சு! - PM Modi tamilnadu visit full details

சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் 125 ஆவது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

“நான் தமிழை நேசிக்கிறேன்”.. ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் பேச்சு!
“நான் தமிழை நேசிக்கிறேன்”.. ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் பேச்சு!

By

Published : Apr 8, 2023, 8:36 PM IST

சென்னை:தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் சுற்றுப் பயணமாக இந்திய விமானப் படையின் தனி விமானம் மூலம் இன்று (ஏப்ரல் 8) மதியம் 2.50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

அப்போது விமான நிலையத்தில் வைத்து பிரதமரை, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து அங்கு இருந்து காரில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, ஆயிரத்து 260 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய முனையத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின்போது, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இதனையடுத்து விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் தளத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, தொடர்ந்து சாலை மார்க்கமாக சென்னையில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சென்றார்.

அங்கு இயங்கி வரும் பேட்டரி காரில் பயணித்த பிரதமர் மோடி, நிகழ்ச்சி மேடைக்குச் சென்றார். பின்னர் சென்னை முதல் கோயம்புத்தூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது ஆளுநர், முதலமைச்சர், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்டோர் இருந்தனர். இதனையடுத்து அங்கு இருந்து புறப்பட்ட பிரதமர், சென்னை மெரினா கடற்கரை அருகில் காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு வந்தடைந்தார்.

பின்னர் அங்கு நடைபெற்ற ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்றார். அங்கிருந்த விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது பிரதமருக்கு விவேகானந்தர் சிலை பரிசாக அளிக்கப்பட்டது. தொடர்ந்து விழா மேடையில் ‘புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற' என்ற திருக்குறள் உடன் பேசிய பிரதமர் மோடி, “125வது ராமகிருஷ்ண மடத்தின் விழாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் சென்னை மக்களின் ஆர்வம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இன்றைக்கு இந்த விழாவில் கலந்து கொண்டதை நான் பாக்கியமாக கருதுகிறேன். கன்னியாகுமரியில் புகழ்பெற்ற பாறையில் தியானம் செய்த சுவாமி விவேகானந்தர், தனது வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடித்தார். இது அவரை மாற்றியது மற்றும் அதன் தாக்கம் சிகாகோவில் உணரப்பட்டது. சுவாமி விவேகானந்தர் வங்காளத்தைச் சேர்ந்தவர். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே தமிழ்நாட்டில் அவருக்கு ஹீரோபோல் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஆன்மீகத் தாக்கம் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையில் எதிரொலித்தது.

பூலோகத்திலும், தேவலோகத்திலும் இரக்க குணத்தைப் போல சிறந்தது வேறொன்றுமில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா ஒரு தேசம் என்ற தெளிவான கருத்தை நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டிருந்தனர். இதுவே 'ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்' அதே உணர்வோடுதான் ராமகிருஷ்ண மடம் செயல்படுகிறது. இன்று, பல நிபுணர்கள் கூறுகிறார்கள். இது இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். மிக முக்கியமாக, ஒவ்வொரு இந்தியனும் இப்போது நம் நேரம் என்று உணர்கிறான்.

காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள பிணைப்பை காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி உணர்த்தியது. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ராமகிருஷ்ண மடம் வழிகாட்டுகிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்பை அளிப்பதன் மூலம் சமுதாயத்தை முன்னேற்றலாம். இந்தியா குறித்து சிறப்பான தொலைநோக்குப் பார்வையை விவேகானந்தர் கொண்டிருந்தார்.

இன்றைய இந்தியா, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நம்புகிறது. ஸ்டார்ட் அப்களாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி, ஆயுதப்படையாக இருந்தாலும் சரி, உயர் கல்வியாக இருந்தாலும் சரி, பெண்கள் தடைகளை உடைத்து சாதனை படைக்கிறார்கள். பெண்கள் முன்னேற்றத்தை விவேகானந்தர் வலியுறுத்தினார். ஐந்து யோசனைகளை ஒருங்கிணைத்து பெரிய காரியங்களை அடைய இந்த அமிர்த கால் பயன்படும். அதற்கு பெயர் பஞ்ச பிரான்.

வளர்ந்த இந்தியாவின் இலக்கு, காலனித்துவ மனநிலையின் தடயங்களை நீக்கி, நமது பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம். ஒற்றுமையை வலுப்படுத்துதல் மூலமாக நமது கடமைகளில் கவனம் செலுத்துகிறோம். 140 கோடி மக்களும் ஒற்றுமையோடு செயல்பட்டால், 2047ஆம் ஆண்டு இந்தியா வளர்ச்சியில் முதல் நாடாக இருக்கும்" என்றார்.

இந்த நிகழ்வில் ஆளுநர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மடத்தைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details