சென்னை:44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 2022, வருகிற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் 190 நாடுகளில் இருந்து 2,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் தங்குவதற்காக சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 37 நட்சத்திர விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் போட்டியில் கலந்துகொள்ள ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளை பயன்படுத்தி மாமல்லபுரம் செல்லத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அந்த சாலைகளில் முழுமையான பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே 4,000 போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் பயண விவரம்: மேலும், இப்போட்டியின் தொடக்க நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி தனி விமானத்தில், அகமதாபாத்தில் இருந்து சென்னை வருகிறார்.
பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அடையாறு விமான தளம் செல்கிறார். தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக மாலை ஆறு மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அதன் பின்னர் 7.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு ராஜ் பவனுக்குச் சென்று, அன்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.