சென்னை:நடிகரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான மறைந்த எம்.ஜி.ராமசந்திரன் 107வது பிறந்த நாள் விழா இன்று (ஜன.17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுகவின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் அந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி, எம்.ஜி.ஆர் குறித்து தனது X வலைத்தள பதிவில், “தலைசிறந்த எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து அவரது வாழ்க்கையை இன்று கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு மிக்க தலைவராகவும் இருந்தார்.
அவரது திரைப்படங்களில் நிறைந்திருந்த சமூக நீதி மற்றும் கருணை ஆகியவை, வெள்ளித்திரைக்கு அப்பாலும் இதயங்களை வென்றன. தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பணி தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி முறிந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்திருந்த நிலையில், எம்.ஜி.ஆர் குறித்து நரேந்திர மோடி பதிவிட்டது. தற்போது, பேசு பொருளாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1998ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதன் முதலாக பாஜகவுடனான கூட்டணியைத் தொடங்கினார். பின் 1999ஆம் ஆண்டில் பாஜக கூட்டணியை ஜெயலலிதா முறித்துக் கொண்டார்.