சென்னை:கடந்த 2004 அக்.12-இல் தமிழ் மொழியை செம்மொழியாக மத்திய அரசு அறிவித்தது. பின்னர் 2005 ஜூலையிலிருந்து தமிழ் மேம்பாட்டுக்கான மையத் திட்டம் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழுக்கு பங்காற்றிய அறிஞர்களை சிறப்பித்தல், தமிழ் மேம்பாட்டு வாரியம் அமைத்தல், செம்மொழி உயராய்வு மையம் தொடங்குதல், தமிழில் ஆய்வு மேற்கொள்வோருக்கு உதவித்தொகை அளித்தல் ஆகியவை தமிழ் மேம்பாட்டுக்கான மையத் திட்டத்தின் கூறுகளாக உள்ளன.
செம்மொழித் தமிழாய்வு மையம் 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் மைசூரில் தொடங்கப்பட்டது. ஒருங்கிணைத்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஒன்றை சென்னையில் நிறுவ வேண்டும் என 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13இல் புது டெல்லியில் நடைபெற்ற நிதிக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு 11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.76.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆக 18இல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டது.