சென்னை:அத்தியாவசியப்பொருட்கள் விலை உயர்வு; பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், 'அக்னிபத்' திட்டம் ஆகியவற்றைக்கண்டித்து சென்னை சைதாப்பேட்டை, சின்னமலை ராஜிவ்காந்தி சிலை அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாய்ப்பாலுக்கும் வரி போடுவார்..!:ஆர்பாட்டத்தில், ஈ.வி.கே.எஸ்.இளங்ககோவன் பேசியதாவது, “நாட்டின் சுதந்திரத்தை அழிக்க நினைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஜி.எஸ்.டி வரியை அரிசி, பால், தயிர் போன்ற பொருட்களுக்குப்போட்டு உள்ளனர். கழுதைப்பாலுக்கும் வரி போடுவார்கள். அதைவிட கொஞ்சம் ஏமாந்தால் தாய்ப்பாலுக்கு கூட ஜி.எஸ்.டி வரி போடுவார்கள்.
5 ஜி அலைக்கற்றை ஏலம் விட்டதில் ரூ.5 லட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரிபோட்டு அதானி, அம்பானிக்கு லாபம் கிடைக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி செய்து வருகிறார். சர்வாதிகாரியாக செயல்பட்டு வரும், மோடி, அமிஷ் தாவை வீட்டுக்கு அனுப்பும்வரை நாம் ஓயக்கூடாது“எனப் பேசினார்.
ராகுல் காந்தி ஆட்சி வரவேண்டும்..!:தங்கபாலு மேடையில் பேசுகையில், “நாடு முழுவதும், ஏழை மக்களுக்கு எதிராக பாஜக செயல்பட்டு வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பன்முக வரி போட்டு வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் 27 கோடி மக்கள் வறுமைக்கோட்டில் இருந்து விலக்கு பெற்றனர்.
பாஜக ஆட்சியில் 23 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்குள் தள்ளப்பட்டுள்ளனர். நல்லாட்சி அமைக்க, 2024இல் ராகுல் காந்தி ஆட்சிவர வேண்டும். ஒவ்வொருவரும் ராகுல் காந்தியாக மாற வேண்டும்” எனப்பேசினார்.
முகவரி தெரியாமல் போவார் மோடி..!:காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், “ஆட்சி அதிகாரத்தை விட்டு இறக்கினால் பிரதமர் மோடி முகவரி தெரியாமல் போய்விடுவார். 5 ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுங்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு அனுமதியே வழங்கவில்லையே.
5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் அனுபவம் இல்லாத அதானி பங்கேற்றுள்ளார். தவறு நடக்கவில்லை என்று அண்ணாமலை சொல்கிறார். 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் நீங்கள் நிர்ணயம் செய்தத்தொகையை விட குறைவாக வந்துள்ளது. அதனால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்.