சென்னை:ஜி20 நாடுகளின் 4வது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் சென்னையில் நேற்றைய முன்தினம் (ஜூலை 26) தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, ஆதார வள பயன்பாடு மற்றும் சுழற்சி பொருளாதார தொழில் கூட்டணியை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் இறுதி நாளான இன்று (ஜூலை 28), ஜி20 நாடுகளின் நான்காவது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை குறித்த அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், "சர்வதேச அளவில் பூனைக் குடும்பத்தை சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட 7 விலங்குகளை பாதுகாக்க ஐபிசிஏ (International Big Cat Alliance) என்ற அமைப்பை இந்தியா தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இருந்த முன்னோடி திட்டமான 'புலிகள் பாதுகாப்புத் திட்டத்தில்' (Project Tiger) இருந்து நாம் கற்றுக் கொண்டதை வைத்தே இந்த ஐபிசிஏ தொடங்கப்பட்டது.
புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் விளைவாக, உலகில் வாழும் புலிகளில் 70 சதவீதம் புலிகள் இந்தியாவில் உள்ளன. இதேபோல் சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் டால்பின் பாதுகாப்புத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி, அதில் வேலை செய்து வருகிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் அடிப்படையில் உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.