சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று (ஜூலை 28) நரேந்திர மோடி 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்தார். இப்போட்டியானது இன்று முதல் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் சிங் தாக்கூர், எல்.முருகன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) தலைவர் ஆர்காடி ஓர்கோவிச் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “செஸ் விளையாட்டின் தாயகமான இந்தியாவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த செஸ் போட்டி நடைபெறுகிறது. 30 ஆண்டுகளில் ஆசியாவில் முதல்முறையாக இப்போட்டி நடைபெறுகிறது. முன்பு நடைபெற்ற போட்டியை விட அதிக நாடுகள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளது. மகளிர் பிரிவில் அதிக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதலாவது ஜோதி ஓட்டம் இந்த முறை நடைபெற்றது.
செஸ் விளையாட்டுடன் தமிழ்நாட்டிற்கு பாரம்பரிய தொடர்பு இருக்கிறது. அதனால்தான் இந்தியாவுக்கான செஸ் கேந்திரமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்தியாவின் பல கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்கள். சிறந்த மனம், துடிப்பான கலாசாரத்திற்கான இல்லமாக தமிழ்நாடு உள்ளது. உலகின் பழமையான மொழி தமிழ்மொழி.
விளையாட்டு அழகானது, அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக உள்ளது. மக்களையும், சமூகத்தையும் விளையாட்டு இணைக்கிறது. குழுவாக விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் ஒருங்கிணைந்து பணியாற்றும் திறன் வளர்கிறது.