சென்னைதியாகராயர் நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேசினார்.
அதில், "இந்திய நாடாளுமன்றம் முடங்கி இருப்பதற்கு முழு காரணம் ஆளும் பாஜக அரசு தான். ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் இந்தியாவில் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கி இருந்தால், ஜனநாயகம் மரணிக்கும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நாடாளுமன்றம் முடங்கி இருப்பதற்கு முழு காரணம் பாஜக தான். மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் வாய் திறந்துபேச வேண்டும்" என்று கூறினார்.
சென்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தப்பட்டதாகவும், அதை ஆளும் கட்சி விவாதிக்க மறுத்துவிட்டதாகவும், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வேண்டும் என்றும், மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தர வேண்டும் என்றும், "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும், பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து மணிப்பூர் விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை விவாதிக்க வேண்டும் என்பதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டி. ராஜா, "மணிப்பூரில் நடக்கும் கலவரத்திற்கு மோடியும் அவர் கட்சியும் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். மணிப்பூர் பிரச்னை தேசிய பிரச்சனையாக, மனிதப் பிரச்னையாக மாறி உள்ளது. அதை மாநில அரசோ, மத்திய அரசோ, இதுவரை எதுவும் பேச முன்வரவில்லை. மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதுதான் மணிப்பூர் பிரச்னைக்குக் காரணம். ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் பிரதமர் மோடி அரசியல் ஆதாயத்திற்காக ஏதோ ஒன்று செய்து கொண்டிருக்கிறார். அவை மக்களை பாதித்துக் கொண்டு தான் இருக்கிறது. மேலும் மணிப்பூர் இந்தியாவின் எல்லை மாநிலங்களுள் ஒன்றாகவும், மிக முக்கிய மாநிலமாகவும் இருக்கிறது.
மணிப்பூரில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்னையால் அப்பாவி மக்கள் இன்று வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூருக்குச் சென்று அரசியல் கட்சிகளை பார்த்தது உண்மை தான், ஆனால் வந்து என்ன செய்தார்? மணிப்பூர் கலவரத்திற்கு என்ன முடிவு செய்தார்? நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊரில் அகதிகளாக வாழ்கின்றனர், பெண்கள் படும் கஷ்டத்தை சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.