சென்னை: நடிகர் சரத்பாபு கதாநாயகன், குணசித்திர வேடம், நாயகர்களின் நண்பன், வில்லன் என 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல திரைப்படங்களில் நடித்தவர். இவர் கடந்த 1973ஆம் ஆண்டு ராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதன்பிறகு 1977ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த பட்டினப் பிரவேசம், நிழல்கள் நிஜமாகிறது போன்ற ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.
இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இவருக்கு கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக சில நாட்களாகவே அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்து வந்தது.
அதுமட்டுமின்றி மே 3ஆம் தேதி சரத்பாபு காலமானார் எனப் பல தகவல்கள் இணையத்தில் வெளியானது. ஆனால் அந்த தகவல் வதந்தி எனவும், சரத்பாபு நலமாக உள்ளார் எனவும், இது போன்ற வதந்தி செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தற்போது தீவிர சிகிச்சைப் பெற்று வந்த சரத்பாபு மே 22ஆம் தேதி நண்பகல் 1.32 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு இன்று சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இவரது மரணம் திரையுலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சரத்பாபுவின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது, “நடிகர் சரத் பாபுவின் மறைவு வேதனை அளிக்கிறது. அவர் பல்துறை மற்றும் படைப்பாற்றலில் திறமை மிக்கவர். அவரது நீண்ட திரைப்பட வாழ்க்கையில் பல மொழிகளில் பல பிரபலமான படைப்புகளுக்காக அவர் என்றும் நினைவு கூறப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” எனப் பதிவிட்டுள்ளார்.