தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதியுடன் முடிந்தன. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ஆம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
ஒட்டுமொத்தமாக 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.75 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் மாணவியர், மாணவர்களை விட 5.07 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 100 சதவீத தேர்ச்சியை 1281 மேல்நிலைப்பள்ளிகள் பெற்றுள்ளன.
இயற்பியலில் 93.89 சதவீதமும், கணிதத்தில் 96.25 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும், வேதியியலில் 94.88%, உயிரியல் 96.05%, தாவரவியல் 89.98%, விலங்கியல் 89.44%, கணினி அறிவியல் 95.27% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 91.10 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த முறை 91.30 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.