தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16 ) வெளியிடப்பட்டன. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7,127 பள்ளிகளில் இருந்து 7 லட்சத்து 79 ஆயிரத்து 931 மாணவர்கள், தனித் தேர்வர்கள் உள்பட 7 லட்சத்து 99 ஆயிரத்து 719 பேர் எழுதினர். இவர்களில் 92.3 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் பொதுப் பாடப்பிரிவில் 7 லட்சத்து 28 ஆயிரத்து 516 மாணவர்களும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் 51,416 மாணவர்களும் தேர்வு எழுதினர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 4 லட்சத்து 24 ஆயிரத்து 285 மாணவர்களில் 94 புள்ளி 80 விழுக்காடு பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் 3 லட்சத்து 55 ஆயிரத்து 646 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 89.41 விழுக்காடு பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவர்களைவிட மாணவியர் 5.39 விழுக்காடு அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள 2,120 பள்ளிகளில் படித்த மாணவர்கள் 100 விழுக்காடு பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட அளவில், 97.12 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 96.99 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 96.3 9 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளது.
தேர்வு எழுதிய 2,835 மாற்றுத்திறனாளி மாணவர்களின் 2,506 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறையிலிருந்து தேர்வு எழுதிய 62 சிறைவாசிகளில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். துறைவாரியான பள்ளிகளில் மெட்ரிக் பள்ளிகள் 98 புள்ளி 70 விழுக்காடு பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் 85.94 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 91.3 விழுக்காடாக இருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 92.3ஆக அதிகரித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 85.94 விழுக்காடு பேரும், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 94.30 விழுக்காடு பேரும், மெட்ரிக் பள்ளிகளில் பயின்ற 98 .70 விழுக்காடு பேரும், இருபாலர் பள்ளிகளில் பயின்ற 92.72 விழுக்காடு பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடப் பிரிவுகளில் படித்த 93.64 விழுக்காடு பேரும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் படித்த 92.96 விழுக்காடு பேரும், கலை பாடப்பிரிவுகளில் படித்த 84.65 விழுக்காடு பேரும், தொழில் பாடப்பிரிவில் படித்த 79.88 விழுக்காடு பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய பாடப்பிரிவான இயற்பியலில் 95.94 விழுக்காடு மாணவர்களும், வேதியலில் 95.82 விழுக்காடு மாணவர்களும், உயிரியலில் 96.14 விழுக்காடு மாணவர்களும், கணிதத்தில் 96.31 விழுக்காடு மாணவர்களும், தாவரவியலில் 93.95 விழுக்காடு மாணவர்களும், விலங்கியலில் 92.97 விழுக்காடு மாணவர்களும், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 99.51 விழுக்காடு மாணவர்களும், வணிகவியல் பாடத்தில் 95.65 விழுக்காடு மாணவர்களும், கணக்குப்பதிவியலில் 94.80 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.