தமிழ்நாடு

tamil nadu

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு - 96.04 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி

By

Published : Jul 31, 2020, 12:02 PM IST

Updated : Jul 31, 2020, 12:11 PM IST

Plus 1 exam results announced
பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

10:16 July 31

சென்னை: பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகளை
அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி இன்று (ஜூலை 31) வெளியிட்டார்.

பதினொன்றாம் வகுப்பு தேர்வை தமிழ்நாட்டிலுள்ள 7 ஆயிரத்து 249 பள்ளிகளிலிருந்து, பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 30 ஆயிரத்து 654 பேர் எழுதினர். இதில் 96.04 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  கடந்த ஆண்டை விட 1.4 விழுக்காடு மாணவர்கள் இந்தாண்டில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 35 ஆயிரத்து 881 பேரும், மாணவர்களில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 561 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.49 விழுக்காடாகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94. 38 விழுக்காடாகவும் உள்ளது. இந்த ஆண்டிலும் மாணவர்களை விட மாணவிகள் 3.11 விழுக்காடு கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

2 ஆயிரத்து 716 பள்ளிகளிலிருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 2 ஆயிரத்து 819 மாற்றுத்திறனாளி மாணவர்களில், 2 ஆயிரத்து 672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுபாடப் பிரிவில் 7 லட்சத்து 63 ஆயிரத்து 424 மாணவர்களும், தொழில்கல்வி பாடப்பிரிவில் 52 ஆயிரத்து 18 மாணவர்களும் தேர்வு எழுதியுள்ளனர். அறிவியல் பாடப்பிரிவில் 96.33 விழுக்காடு, வணிகவியல் பாடப்பிரிவில் 96.28 விழுக்காடு, கலை பாடப் பிரிவுகளில் 94.11 விழுக்காடு, தொழில் பாடப்பிரிவில் 92.77 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மாவட்ட அளவில், கோவை மாவட்டம் 98.10 விழுக்காடு தேர்ச்சியுடன் முதலிடமும், விருதுநகர் மாவட்டம் 97.90 விழுக்காட்டுடன் இரண்டாம் இடமும்,  கரூர் மாவட்டம் 97.51 விழுக்காடு பெற்று மூன்றாம் இடமும் பெற்றுள்ளன.

முக்கிய பாடங்களில் தேர்ச்சிவிழுக்காடுவிவரம்:

இயற்பியல் - 91.68

வேதியியல் - 99.95

உயிரியல் - 97.64

கணக்கு - 98.56

தாவரவியல் - 93.78

விலங்கியல் - 94.53

கணிப்பொறி அறிவியல் - 99.25

வணிகவியல் - 96.44

கணக்கு பதிவியல் - 98.16

பள்ளி வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்

அரசுப் பள்ளிகள் 92.71 விழுக்காடு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 96.95 விழுக்காடு, மெட்ரிக் பள்ளி 99.51 விழுக்காடு, இருபாலர் பள்ளிகள் 96.20 விழுக்காடு, பெண்கள் பள்ளிகள் 97.56 விழுக்காடு, ஆண்கள் பள்ளிகள் 91.77 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழகம்: செப் 10க்குள் இளநிலை சேர்க்கையை முடிக்க உத்தரவு!

Last Updated : Jul 31, 2020, 12:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details