இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி, தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் 1947 முதல் 1949 வரையிலான இடைப்பட்ட காலத்தில் 550 சுதேச அரசுகளை ஒருங்கிணைத்து இந்தியாவை வலுவான நாடாக உருவாக்கினார். சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றார்.
இந்த தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் தேசிய ஒற்றுமைக்கான உறுதிமொழி ஏற்குமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்திருந்தது. மேலும் இந்நாளை, 'ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ்' என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசு அலுவலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் காலை, 11:00 மணியளவில் தேசிய ஒற்றுமை உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.