தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு.. ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி.. - மனோஜ் பாண்டியன் கோரிக்கை நிராகரிப்பு

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடியும்வரை பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்காமல் இருக்க உத்தரவிட வேண்டும் என்ற மனோஜ் பாண்டியன் தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

Plea
Plea

By

Published : Mar 3, 2023, 12:56 PM IST

சென்னை:அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராகவும், ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர் செல்வத்தைகட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொதுக்குழு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பன்னீர் செல்வம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும், தீர்மானம் கொண்டு வர பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டு பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், உரிமையியல் வழக்கு தொடர நீதிமன்ற தீர்ப்பு தடையாக இருக்காது எனவும் குறிப்பிட்டது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியதுடன், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது சட்ட விரோதமானது. அதனால், கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொழுக்குழுவை ரத்து செய்ய வேண்டும் என மனோஜ் பாண்டியன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று (மார்ச்.3) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் மனோஜ் பாண்டியன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார், "அதிமுகவில் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். தீர்மானம் கொண்டுவர அவர்கள் வலியுறுத்த வேண்டும். முதன்மை உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. ஓ.பி.எஸ் மற்றும் மனோஜ் பாண்டியன் நீக்கப்பட்டது சரியா? தவறா? என்பதை முடிவு செய்யப்பட வேண்டும். உறுப்பினரை நீக்குவதற்கு முன் விளக்கம் கேட்கப்படவில்லை. எந்த குற்றச்சாட்டும் இல்லை.

கட்சி விதி 35, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கட்சியின் எந்த முடிவும் எடுக்க வேண்டும் என கூறுகிறது. கட்சி விதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் உறுப்பினர்கள் நீக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், என்ன காரணத்திற்காக நீக்கம் என தெரிவிக்கவில்லை.

மனுதாரர் மனோஜ் பாண்டியன் வேறு எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை, கட்சிக்கு எதிராகவும் பேசவில்லை. உட்கட்சி பூசலை மையமாக வைத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தேர்தல் ஆணையம் பொதுக்குழு தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், உச்சநீதிமன்றமும் தீர்மானத்தை எதிர்த்து வழக்கை தொடர அனுமதி அளித்தது" என வாதம் செய்தார்.

இதை பதிவு செய்த நீதிபதி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் விளக்கம் கேட்காமல், பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், வழக்கு முடியும் வரை பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்காமல் இருக்க தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, பன்னீர் செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியனிடம் விளக்கம் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கியது ஏன்? என விளக்கமளிக்க எடப்பாடி தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: சென்னையில் ஜீரோ கார்பேஜ் நிலை - மேயர் பிரியாவுக்கு கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details