கடந்த 9ஆம் தேதி நள்ளிரவு சென்னை அண்ணா நகர் ரவுண்டானா அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 12 கிலோ தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, நகைகளை கொண்டு சென்ற நபரிடம் நடத்திய விசாரணையில் ’’சவுகார்பேட்டையை சேர்ந்த சந்திரபிரகாஷ் என்பதும் நகை வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், 12 கிலோ நகைகளை விருத்தாசலம் மாவட்டத்தில் விற்பனை செய்ய கொண்டு செல்லும் போது சிக்கியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், நகைக்குண்டான ஆவணங்களை காண்பித்ததால் காவல்துறையினர் அழைக்கும் நேரத்தில் நகையுடன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எழுதி வாங்கி கொண்டு சந்திரபிரகாஷை அனுப்பினர். இந்நிலையில் 12 கிலோ நகைகள் சிக்கிய விவகாரத்தை வருமான வரி புலனாய்வு அலுவலர்களுக்கு தெரிவிக்காததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணாநகர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டுள்ளனர்.