பழம் பெரும் நடிகை எம்.என். ராஜமின் கணவரும், பின்னணி பாடகருமான ஏ.எல். ராகவன் சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.
இதற்கிடையே, இன்று ( ஜூன் 19) காலை ராகவன் மாரடைப்பால் காலமானார். 87 வயதாகும் இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.
கரோனா தொற்று இவருக்கு இருந்ததால் இவரது உடல் மருத்துவமனையில் இருந்து மயிலாப்பூரில் உள்ள மயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு இன்று மாலை இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது. இதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர்.
ஏ.எல். ராகவன் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் பிறந்தவர். கர்நாடக சங்கீத ஆசிரியரான தனது தந்தையை, எட்டு வயதிலேயே இழந்த இவர், தனது வீட்டைவிட்டு வெளியேறி அருணாசலம் என்பவரின் 'ராம பால கான விநோத சபா'வில் சேர்ந்தார்.
இயல்பாகவே இருந்த இசைஞானமும் சொந்த முயற்சியும் இவரை ”திருமழிசை ஆழ்வார்” நாடகத்தில் விஷ்ணுவாகவும், நாரதராகவும் நடிக்க வைத்தது. இவரது நடிப்பைப் பார்த்த ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தினர், தங்களுடைய ‘கிருஷ்ண விஜயம்‘ படத்தில் கிருஷ்ணராக நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.
அதன்பிறகு சென்னைக்கு வந்து ‘புதையல்’ படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து ‘ஹலோ மை டியர் ராமி’ பாடலைப்பாடும் வாய்ப்பைப் பெற்று சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் இடம்பெற்றுள்ள இவரது பாடல்கள், இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத பாடல்களாக அமைந்துள்ளன. 'எங்கிருந்தாலும் வாழ்க', 'நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்', 'பூஜைக்கு வந்த மலர்' என்று இவரின் தனித்துவக் குரலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.