தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெகிழிப் பொருட்களுக்கு அரசு விதித்த தடை செல்லும் - உயர் நீதிமன்றம் - Plastic Ban

சென்னை: மறுசுழற்சி செய்ய முடியாத 14 வகை நெகிழிப் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து பிறப்பித்த அரசாணை செல்லும் என உத்தரவிட்டு நெகிழித் தடைக்கு எதிரான அனைத்து மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது.

HighCourt

By

Published : Jul 11, 2019, 5:41 PM IST

Updated : Jul 11, 2019, 7:32 PM IST

தமிழ்நாட்டில் மறு சுழற்சி செய்ய முடியாத 14 வகை நெகிழிப் பொருட்களுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான நெகிழிப் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த நெகிழிப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் சங்கம், சேலம் நெகிழி தயாரிப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு அளித்த தீர்ப்பின் விவரம்:

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பல படிநிலைகள் கொண்ட மறு சுழற்சி செய்ய முடியாத ஆவின் பால் பாக்கெட், மருந்துப் பொருட்கள், எண்ணெய், பிஸ்கெட் வைப்பதற்கு பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களுக்கும், பன்னாட்டு நிறுவன நெகிழிப் பொருட்களுக்கும் விலக்கு அளித்திருப்பது பாரபட்சமானது என தெரிவித்தனர்.

மருந்து, பால் உள்ளிட்டவை அத்தியாவசியப் பொருட்கள் என்பதால் விலக்கு அளித்திருப்பதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நெகிழித் தடை

ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மருந்து, பால் ஆகியவை அத்தியாவசியப் பொருட்களே தவிர, அதற்காக பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களுக்கும் தடைவிதித்தால் மாசடைவது தடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த நெகிழிப் பொருட்கள் எளிதில் மக்காது என்பதால் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அவற்றிற்கும் அரசு அமல்படுத்தினால்தான் தடை அர்த்தமுள்ளதாக இருக்கும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆவின் பாலை நெகிழி உறைக்கு பதிலாக கண்ணாடி புட்டிகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டுமெனவும், இல்லாவிட்டால் இந்தத் தடை உத்தரவு முழுமையாக இருக்காது எனவும், வெறும் காகித அளவிலேயே இருக்கும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

நெகிழிப் பொருட்களுக்கு பதிலாக துணி, சணல், பாக்குமட்டை ஆகிய மக்கும் பொருட்களை ஊக்குவிக்க வேண்டுமெனவும், கடுமையான அபராதம் விதிக்காவிட்டால் நெகிழிப் பொருட்கள் மீதான தடை முழுமையாக அமலில் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அறிவியல் ஆய்வுகளின்படி நெகிழிப் பொருட்கள் மக்குவதற்கு நூறாண்டுகளுக்கு மேலாவதாகவும், பல உயிரினங்கள் அவற்றை உட்கொள்வதால் மரணிப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நகரமயமாக்கல், மக்கள் தொகை பெருக்கம் ஆகியவை நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை அதிகரிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

உணவகங்களில் நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவது அபாயகரமாக இருப்பதால், சுற்றுச்சூழல், இயற்கை செயற்பாட்டாளர்கள், அரசு ஆகியோர் மெள்ள மெள்ள சிந்தித்து நெகிழிப் பயன்பாட்டிலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டுமென்ற முனைப்பைக் காட்டி உலகைக் காப்பதற்கு முன்வந்துள்ளனர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நெகிழிப் பொருட்கள் மீதான தடை உத்தரவு காகிதத்தில் மட்டும் இல்லாமல், கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டு நெகிழிப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், சங்கங்களின் மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், அரசாணையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

Last Updated : Jul 11, 2019, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details