சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீரை அகற்றுவதற்கு அதிகாரிகள் அனுமதி பெற்ற பிறகே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நகராட்சி மற்றும் நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பேரவையில் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், பேரவை மண்டபத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இன்று தூத்துக்குடி தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், 'அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீரை அகற்றுவதற்கு அதிகாரிகள் அனுமதி பெற்ற பிறகே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சென்னை போன்ற பல்வேறு மாநகரங்களில் கழிவுநீரை அகற்றுவதற்கு பல கருவிகள் உள்ளன.
ஆனால் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் சுத்தம் செய்வதற்கு அப்பகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு தெரியாமல் அவர்களாகவே சுத்தம் செய்வதற்கு ஆட்களை இறக்குவதால் தான் விஷவாயு தாக்கி அதிகளவில் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன.
அதனால் தற்போது கழிவுநீரை எடுப்பதற்கு கூட அனுமதி பெற்று தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முறையை கொண்டு வந்துள்ளோம். இதற்காக பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் குடும்பத்தில் யாராவது பணியின்போது இறந்திருந்தால் அவர்களைத் தொழில் முனைவோர்களாக உருவாக்குவதற்காக பணிகளும் நடைமுறையில் வரயிருக்கிறது.
எதுவாக இருந்தாலும் இனிமேல் விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை? சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கூறியது என்ன!