சென்னை திரு.வி.க. நகரில் அமைந்துள்ள கரோனா மருத்துவ சிகிச்சை முகாமினை சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “முழு அடைப்பு காலத்தைப் பயன்படுத்தி 30 நிரந்தர சோதனை மையங்கள், 10 நடமாடும் சோதனை மையங்கள் ஆகியவை மூலமாக பொதுமக்களின் சோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முழு அடைப்பை சரியான முறையில் கடைப்பிடித்து வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து, கைகளை அடிக்கடி கழுவி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இ-பாஸ் வழங்குவதும் கூட கட்டுப்படுத்தப்பட்டு, அவசர தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் அரசின் கரோனா பரிசோதனை மையங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டறிய அஜய் யாதவ் ஐஏஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது புகார் அளிக்க 104 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு, குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.