சென்னை: பாதயாத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்கும் என்பது அரசியல்வாதிகளின் கணிப்பாக இருக்கிறது. கடந்த காலங்களில் பாதயாத்திரை மூலம் ஆட்சியைப் பிடித்த வரலாறும் உண்டு. சமீபத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் 'பாரத் ஜோடோ'என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இப்பயணம், பல்வேறு மாநிலங்கள் வழியாக சென்று ஜம்மு-காஷ்மீரில் நிறைவடைந்தது. இதில் ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன் எதிரொலியாகவே, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் ராகுல்காந்திக்கு முன்பைவிட செல்வாக்கு அதிகரித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் 'என் மண்; என் மக்கள்' என்ற பெயரில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திருச்செந்தூரில் இருந்து ஜூலை 9ம் தேதி நடைபயணத்தை தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முதல் சென்னை வரை உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், ஒரு நாளைக்கு 2 சட்டமன்றத் தொகுதிகள் வீதம் 100 நாட்கள் நடைபயணம் செல்ல திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருசில இடங்களில் வாகனங்கள் மூலம் அண்ணாமலை பயணம் செய்யுவும் திட்டமிடப்பட்டுள்ளது.
'திமுக ஃபைல்ஸ்' என்ற தலைப்பில் அக்கட்சியினருடைய சொத்துப்பட்டியலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணாமலை வெளியிட்டார். அதில் முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரின் சொத்து விவரங்களை குறிப்பிட்டிருந்தார். தனது நடைபயணம் முடிந்த பிறகு, 'திமுக ஃபைல்ஸ்-2' என்ற பெயரில், திமுகவைச் சேர்ந்த 21 பேரின் சொத்துப்பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.