சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையிலான மோதலில் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் மூலம் ஈபிஎஸ் வெற்றி பெற்றார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உச்சநீதிமன்றம் வரை சென்று இடையீட்டு மனு மூலம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தோல்வியடைந்தார். அப்போது ஈபிஎஸ்க்கு செல்வாக்கு இல்லை எனவும் மக்கள் ஈபிஎஸ்ஸை ஏற்கவில்லை எனவும் ஓபிஎஸ் தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆனால் ஓபிஎஸ் தரப்பினரின் குற்றச்சாட்டு எடுபடவில்லை. இதற்கு காரணம், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக தோற்றிருந்தாலும் டெபாசிட் வாங்கியிருந்தது.
அடுத்தக்கட்டமாக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பு வந்தது. அந்த பொதுக்குழுவில் தான் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகவும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. பொதுக்குழு தொடர்பான தீர்மானங்கள் குறித்து உரிமையியல் நீதிமன்றத்தில் பார்த்து கொள்ளவும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. உச்சநீதிமன்றம் வழிகாட்டுப்படி ஓபிஎஸ் சார்பாக அவரது ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.
ஈபிஎஸ் அணியினர் மற்ற கட்சியினரை அதிமுகவில் இணைக்கும் வேலைகளிலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்தும் நிகழ்வுகளில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து பின்னடைவை சந்தித்த ஓபிஎஸ் அடுத்தாக என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி அவரை சுற்றி வட்டமடித்துக் கொண்டு இருந்தது.
இந்த நிலையில் ஓபிஎஸ்சின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக காலமானார். அதனால் தற்போது ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளத்தில் இருந்து அதிமுகவில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து அவரது ஆதரவாளர்களிடம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ், அதிமுகவில் தனக்கான செல்வாக்கை நிரூபிக்க திருச்சியில் மாபெரும் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா, அதிமுகவின் 50வது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழாவாக அதனை நடத்த ஓபிஎஸ் அணியினர் திட்டமிட்டுள்ளனர். திருச்சி பொன்மலையில் சுமார் 5,00,000 பேரை திரட்டி கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், அரசியலில் ஈடுபாடுடன் இருக்கும் இளைஞர்களை வளர்க்கவும், பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஓபிஎஸ்சின் செயல்பாடுகளுக்கு பின்னால் பாஜக இருப்பதாக கூறப்படுகிறது.