சென்னை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குடிநீர் தேவை 1150 எம்எல்டி
ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, "சென்னையின் மொத்த குடிநீர் தேவை நாளொன்றுக்கு 1,150 மில்லியன் லிட்டர். இந்த தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இதில் 240 முதல் 250 எம்எல்டி குடிநீர் தான் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனுடன் கடந்த 2010 ஆம் ஆண்டில், காவிரி ஆற்றில் மிகை நீர் இருக்கும் காலங்களில் அந்த நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் போடப்பட்டது. அந்த திட்டம் தற்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னைக்கு காவிரி நீர்
காவிரியில், மழைக்காலங்களில் வரும் மிகை நீரை பாலாற்றிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கு சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக மாற்றப்பட்டு விநியோகிக்கப்படும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர 5, 6 ஆண்டுகளாகும் எனத் தெரிவித்தார்.
குடிநீர் வடிகால் வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நிலத்தடிநீர் கண்காணிப்பு
லாரிகளில் குடிநீரை விநியோகம் செய்யப்படுவதை முழுவதுமாக நிறுத்தி, குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீரின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். மேலும், சென்னையில் 8.60 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு சரி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 4093 கி.மீ., நீளம் கழிவு நீர் கட்டமைப்பு உள்ளது. மழைநீர் அதிகம் தேங்கும் தெருக்களுக்கு முன்னுரிமை அளித்து தூர்வாரப்பட்டு வருகிறது. பருவ மழை தொடங்குவதற்கு முன் அனைத்து பணிகளும் நிறைவடையும். கழிவுநீர் குழாய்களை அடைப்பெடுக்கும் பணிக்காக புதிதாக 76 நவீன இயந்திரங்கள் 3 மாத கால அளவிற்குள் கொண்டு வரப்படும். 10 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு புதியதாக கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
கூவத்தை சுத்தப்படுத்த புதிய திட்டம்
மீதமுள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கும் கழிவுநீர் இணைப்பு விரைவில் வழங்கப்படும். நாளொன்றுக்கு 850 எம்எல்டி கழிவு நீர் வெளியேறுகிறது. அதில் 450 எம்எல்டி கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. மீதமுள்ள கழிவுநீரை சுத்திகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 310 இடத்தில் கழிவு நீர் நேரடியாக கூவம் ஆற்றில் கலக்கிறது. அதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கூவத்தை சுத்தப்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுக்குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டங்கள் என 72 திட்டங்கள், 13 ஆயிரம் கோடி செலவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் திருத்தியமைப்பு!