சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தனது பதவி காலத்தில் சுமார் 280 கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டதாக அரசுக்குப் புகார்கள் வந்துள்ளன. அந்தப் புகார்கள் குறித்து விசாரணை செய்து அறிக்கை அளிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை அலுவலராக நியமனம் செய்து உயர் கல்வித் துறை செயலர் அபூர்வா நவம்பர் மாதம் 11ஆம் தேதி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில் நிதி முறைகேடுகள், நியமன முறைகேடுகள் உள்ளிட்டவற்றை விசாரணை செய்து மூன்று மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதன்படி விசாரணைக் குழுவின் காலம் வரும் பிப்ரவரி 11ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணைக் குழு கூறியதாவது, "அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது தற்போதும் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவர் மீது புகார் அளித்தவர்களிடம் விசாரணை செய்துவிட்டோம்.
ஆனால் புகார்தாரர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து ஆவணங்களைப் பல்கலைக்கழகத்திலிருந்து பெருவதற்கு காலதாமதம் ஆகின்றது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா தொடர்ந்து நீடித்துவரும் நிலையில் அங்கிருந்து ஆவணங்களைப் பெறுவதில் சவால்களும், சிரமமும் இருந்துவருகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் சூரப்பாவின் மகள் ஏழு மாதமாக அங்கு பணிபுரிந்துள்ளார். அவர் பணிபுரிந்ததற்கு எந்தவித ஆவணங்களும் இல்லை என அந்தத் துறையின் தலைவர் கூறுகிறார். தனது மகள் பணிபுரிந்ததை துணைவேந்தரே ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோல் பிற துறைகளில் நடைபெற்ற நியமனங்கள் குறித்து ஆவணங்களைக் கேட்டு ஆய்வு செய்துவருகிறோம்.
தற்போதுவரை விசாரணை செய்ததில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் அறிக்கையாகச் சமர்ப்பிக்கலாமா அல்லது மேலும் காலநீட்டிப்பு பெற்று துணைவேந்தர் உள்ளிட்ட சில அலுவலர்களை விசாரணை செய்து அதன்பின்னர் அறிக்கையைச் சமர்ப்பிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை செய்துவருகிறோம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலர்கள் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதற்கு மறுத்துவருகின்றனர். விசாரணையை விரிவுபடுத்த அரசிடம் ஆலோசித்து காலநீட்டிப்பு அனுமதி பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.