கரோனா பாதிப்பு காரணமாக, பொது போக்குவரத்து முற்றிலுமாக முடக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில், அரசு பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களுக்காக மட்டும் சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், இதில் வங்கி ஊழியர்களும் பயணிக்க அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில், துப்புரவு பணியாளர்கள், தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட மேலும் சில தரப்பினருக்கு கூடுதலாக அனுமதி வழங்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,
- அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் சுகாதார மற்றும் துப்புரவு பணியாளர்கள்
- அரசு மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை வழங்குவதில் ஈடுபட்டுள்ளவர்கள்
- அனைத்து கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள்
- தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்
- பொதுமக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் தொடர்புடைய போக்குவரத்து நிறுவன ஊழியர்கள்
- குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு
- கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் சமூக சேவை நிறுவன ஊழியர்கள்
- அச்சு மற்றும் மின்னணு ஊடக ஊழியர்கள்
- பார் கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர்கள்
மேற்கண்டவர்களுக்கு சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க, தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் மின்சார ரயில்களில் பயணிப்பதன் மூலம் கரோனா பாதிப்பு விரைவில் பரவக்கூடும் என பல்வேறு ஆய்வாளர்களும், மருத்துவர்களும் எச்சரித்து வருகின்றனர்.