சென்னை:திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 31) மனு தாக்கல்செய்தார். அந்த மனுவில், "தமிழ்நாடு அரசு 2021-22ஆம் ஆண்டு வெளியிட்ட வேளாண் துறை கொள்கையில், விவசாயத்துக்கு இயந்திரங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயந்திரங்களுக்குப் பயன்படுத்தும் டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருள்களின் விலை தற்போது லிட்டருக்கு நூறு ரூபாய் அளவில் உள்ளது. ஏற்கனவே உற்பத்திச் செலவு அதிகரிப்பு, குறைந்த விலைக்கு விளைபொருள்கள் கொள்முதல் ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எரிபொருள் விலை உயர்வு கூடுதல் சுமையாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயித்த போதும், அதன் மீது வாட் எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி, உள்ளூர் செஸ் வரிகளை மாநில அரசு விதிப்பதாகச் சுட்டிக்காட்டிய மனுதாரர், பிகார் மாநிலத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் ஒரு லிட்டர் டீசல் 50 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் மானியம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதைப் போல, விவசாயிகளுக்கும் மானிய விலையில், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் வழங்கக் கோரி மத்திய - மாநில அரசுகளுக்கு அனுப்பிய விண்ணப்பத்தைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை முதல் அதி கன மழைக்கு வாய்ப்பு