தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 18, 2023, 5:25 PM IST

ETV Bharat / state

பிச்சைக்காரன் 2 ரிலீஸ் தள்ளிப்போவதால் பண நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது - விஜய் ஆண்டனி

பிச்சைக்காரன் 2 படத்தின் வெளியீட்டை நீதிமன்றம் தள்ளிவைத்ததால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த ராஜகணபதி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் சார்பில் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து இருந்தோம். கடந்த 2016ஆம் ஆண்டு நாங்கள் தயாரித்த படத்தின் கதையை எங்களுடைய அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 2 படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த கதைத் திருட்டு விவகாரம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி விஜய் ஆண்டனி சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் இன்று பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ஆய்வுக்கூடம் படம் குறித்த எந்த தகவலும் தமக்கு எதுவும் தெரியாது எனவும், அந்த படத்தை தாம் பார்த்தது கூட இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்த படத்தை பார்த்ததாகவும், பிச்சைக்காரன் 2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை எனவும், விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

படம் வெளியாவதைத் தடுக்க வேண்டுமென்ற தவறான நோக்கத்துடன் கடைசி நேரத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், படத்தை வெளியிடுவது தள்ளிப்போனதால் பொருளாதார ரீதியாக தமக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டதோடு, மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி வேதனைத் தெரிவித்துள்ளார்.

பிச்சைக்காரன் 2 படத்தின் கதைக்கரு பொது வெளியில் உள்ளது. மேலும் இதே கதை கருவோடு 1944ஆம் ஆண்டு முதல் பல்வேறு மொழிகளில் பல படங்கள் வெளியாகி உள்ளன. இந்த கதையின் கருவை மனுதாரர் உரிமை கொண்டாட முடியாது என விஜய் ஆண்டனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறபட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்து, நீதிபதி எஸ்.சௌந்தரிடம் முறையிடப்பட்ட போது, இரு தரப்பு வாதங்களுக்காக வழக்கை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு வழக்கினை தள்ளிவைத்துள்ளார்.

இதையும் படிங்க:"உயிர் உங்களுடையது தேவி": குந்தவையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details