சென்னை டிபி சத்திரம் பகுதியில் வசிப்பவர் அந்தோணி(50). இவருக்கு சிறுவயதிலேயே பார்வை கிடையாது. இதனால் வேறு எந்த தொழிலும் செய்யமுடியாமல் தவித்து வந்த இவர், பேருந்து நிலையம் சென்று பாட்டுப் பாடி அதன் மூலம் ஈட்டப்படும் வருவாயைக் கொண்டு வாழ்கையை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற ஜெபக்கூட்டத்திற்குச் சென்றுள்ளார். ஜெபக்கூட்டத்தை முடித்துவிட்டு தேவாலயத்தை விட்டு வெளியே வந்த போது அந்த திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்தது. மாநகரப் பேருந்து இவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அந்தோணி பரிதாபமான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கை முறிந்து பெரும் சேதம் ஏற்பட்டதால், உடனே அறுவை சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கைகளை இழந்த பார்வையற்றவர்: கண்ணீரோடு அவரின் சகோதரி! இது தொடர்பாக அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், காவல்துறையினர் எப்ஐஆர் கூட போடவில்லை என்று அந்தோணியின் தங்கை குற்றம்சாட்டியுள்ளார். மேலும் விபத்து நடந்த இடத்தில் பல சிசிடிவி கேமராக்கள் இருந்தபோதும், காவல் துறையினர் கேமராக்கள் இல்லை என பொய் கூறுகின்றனர் என்று கண்ணீரோடு தெரிவித்தார்.
மேலும் விபத்து ஏற்படுத்திய மாநகர பேருந்து ஓட்டுநரை கைது செய்து, அறுவைச் சிகிச்சை செய்வதற்காக உதவித்தொகை பெற்றுத்தருமாறு காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக கூறினார்.