சென்னை:சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் காவிரி ஆற்றில் மேற்கொண்ட ஆய்வில் மருந்து தயாரிக்க பயன்படும் ரசாயன பொருள்கள், அழகு சாதன பொருட்கள், பிளாஸ்டிக், தீ அணைப்பான்கள், கன உலோகங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை கலந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
இவற்றில், மருந்து பொருள்களால் ஏற்படும் மாசு மிக அதிகம். இந்தியா, உலகின் இரண்டாவது பெரிய மருந்து உற்பத்தி நாடாகும். மருந்துசார் மாசு பொருள்கள் சிறிய அளவுகளில் நீர்நிலைகளில் கலந்தாலும் நீண்ட காலத்திற்கு மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும்.
டாக்டர் லிகி பிலிப், நிதா மற்றும் சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும், நிறுவனத் தலைவருமான கே.ஜி. கணபதி தலைமையிலான ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் குழு, காவிரி ஆற்றில் அதிகரித்து வரும் மாசு பொருள்களின் பருவகால பரவலை அளவிடும் ஆய்வை மேற்கொண்டது. நதி நீரின் தரத்தை மதிப்பிடுவது மாசு பொருள்களின் பரவலையும் அதற்கான காரணிகளையும் சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் தாக்கத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது.
காவிரி ஆற்றில் மருந்துப் பொருள்களால் மாசுபடுவதைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம். மாசு பொருள்கள் தஞ்சமடையும் நீர்நிலைகளில் மாசின் அளவை குறைக்க, கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டியதன் தேவையையும் ஆய்வு குறிப்பிடுகிறது.
இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் நீர் தொழில்நுட்ப முன்னெடுப்பு மற்றும் இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிதி உதவியுடன் இந்த அய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.