முதுகலை ஆசிரியர் பணி மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணிக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 466 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆன்லைன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 154 மையங்களில் நடைபெற்றது.
இந்தத் தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்த ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 466 தேர்வர்களில், ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 580 தேர்வர்கள் எழுதியுள்ளனர். 37 ஆயிரத்து 866 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தகுதியானவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இயற்பியல், தாவரவியல், உடற்கல்வியியல், புவியியல், மனை அறிவியல், இந்திய கலாசாரம், அரசியல் அறிவியல், ஆங்கிலம், உயிர்வேதியியல், வணிகவியல், தமிழ், நுண்ணுயிரியல் (மைக்ரோ பயாலஜி), கணக்கு, வேதியியல், விலங்கியல், பொருளாதாரம், வரலாறு ஆகிய பாடங்களுக்கான தேர்வர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் மூன்றாயிரத்து 824 பேரின் பட்டியலைப் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரிய www.trb.tn.nic என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.