சென்னை:கிண்டி 'ஆளுநர் மாளிகை' நுழைவு வாயிலில் இன்று (அக்.25) மாலை இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிய தேனாம்பேட்டை சரித்திர பதிவேடு ரவுடி வினோத்தை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஆளுநர் மாளிகை சார்பாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பெட்ரோல் குண்டுகள் ஆளுநர் மாளிகை நோக்கி வீசப்பட்டு உள்ளதாகவும் பெட்ரோல் குண்டு ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட சம்பவத்தை தீவிரவாத செயலாக பார்ப்பதாகவும் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு தடவியல் துறை நிபுணர்கள் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். கண்ணாடி பாட்டில்கள் மண் உள்ளிட்டவைகளை எடுத்து சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். என்ன எரிபொருள் பயன்படுத்தி உள்ளார்? என்பதை உறுதி செய்வது தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் வினோத் மட்டும்தான் ஈடுபட்டரா? அல்லது இதன் பின்புலத்தில் வேறு யாராவது உள்ளார்களா? என்ற கோணத்தில் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.