சென்னை: பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு பங்களா, கரூரில் உள்ள அவரது பூர்வீக வீடு உள்ளிட்ட அவரது தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையில் நேற்று (ஜூன் 13) காலை முதல் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையை தொடர்ந்து இன்று (ஜூன் 14) அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த மனுவில், அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் செந்தில் பாலாஜி கணக்கில் 1.34 கோடி ரூபாயும், அவரது மனைவி கணக்கில் 29.55 லட்சம் ரூபாயும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது அவர்கள் வருமான வரிக் கணக்கை ஒப்பிடும் போது அதிகமானது. கடந்த 2022ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு பல முறை சம்மன் அனுப்பியும், ஒரு முறை கூட நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கவில்லை.