தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்கள் உத்தரவுக்கு தடைகோரி உயர் நீதிமன்றத்தில் மனு - Puducherry

Puduchery mla appointment
Puduchery mla appointment

By

Published : May 19, 2021, 3:58 PM IST

Updated : May 19, 2021, 4:45 PM IST

15:49 May 19

புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்களை நியமித்து பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றிய என்ஆர் காங்கிரஸ் - பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

அதன்படி புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 10ஆம் தேதி கரோனா பாதித்து, சென்னை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய 3 நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக்கோரியும், இந்த உத்தரவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக்கோரியும் புதுச்சேரி - கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், 'புதுவை முதலமைச்சர் ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களும் பதவி ஏற்காத நிலையில், 3 நியமன எம்.எல்.ஏ-க்களை நியமிக்க எந்த அவசரமும் இல்லை' என்று தெரிவித்து இருக்கிறார்.

பதவியேற்கும் முன்பே, இந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும் தலைமைச் செயலாளர் மற்றும் துணைநிலை ஆளுநருடன் கூட்டங்களை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

சட்டப்படி, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமிக்க வேண்டும் என்றும், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களை நியமித்துள்ளது மோசமான செயல் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசன மரபுப்படி நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம் தொடர்பாக, மாநில அமைச்சரவை, துணைநிலை ஆளுநருக்குப் பரிந்துரையை வழங்கும் எனவும், ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி நியமன உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும்; இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படாததால், 3 நியமன எம்.எல்.ஏ-க்கள் நியமனம் தொடர்பான உத்தரவு செல்லாது என அறிவித்து, அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:அரசு தவறாக சென்றால் திமுக எதிர்ப்புத் தெரிவிக்கும் - புதுச்சேரி எம்.எல்.ஏ சிவா

Last Updated : May 19, 2021, 4:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details